அயர்லாந்தை டி20 போட்டியில் வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி

Updated in 2022-Jun-27 03:49 AM

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதிய முதல் டி20 ஆட்டம் டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹாா்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இருப்பினும் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

தொடர்ந்து, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பால் ஸ்ட்ரிலீங் மற்றும் ஆண்ட்ரியூ பால்ஃப்ரின் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சில் திணறி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், ஹாரி டெக்டரின் அதிரடி ஆட்டதால் அயர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. டெக்டர் 64 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், 109 ரன்கள் என்கிற இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தைத் துவங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தீபக் ஹூடா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இஷான் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். இறுதியாக, ஹூடாவின் அதிரடியான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 9.2 ஓவர்களில்  111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார்.