மகனை தொடர்ந்து மகளுக்கும் தலைமை பொறுப்பை அளிக்க உள்ள முகேஷ் அம்பானி

Updated in 2022-Jun-29 12:09 PM

மகனை தொடர்ந்து மகளுக்கும் பொறுப்பு... மகன் ஆகாஷ் அம்பானியைத் தொடர்ந்து, மகள் இஷா அம்பானிக்கும் தலைமைப் பொறுப்பை கொடுக்கவுள்ளார் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவா் பொறுப்பில் இருந்து விலகிய முகேஷ் அம்பானி (65), அந்தப் பதவியை தனது மூத்த மகன் ஆகாஷிடம் ஒப்படைத்துள்ளார்.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்ற இந்நிறுவனத்தின் இயக்குநா் குழுக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக மும்பை பங்குச் சந்தைக்கு அந்நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. முன்னதாக அந்நிறுவனத்தின்  அலுவல் சாரா இயக்குநராக ஆகாஷ் அம்பானி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தனது ரிலையன்ஸ் சில்லறை விற்பனை பிரிவிற்குத் (Reliance retail unit) தலைவராக மகள் இஷா அம்பானியை நியமிக்க முகேஷ் அம்பானி  முடிவெடுத்துள்ளார். தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் யூனிட்டின் இயக்குநராக இஷா அம்பானி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நிர்வாகத்தில் இளைய தலைமுறையினருக்கு பொறுப்பு அளிக்க வேண்டும் என்று முகேஷ் அம்பானி கூறியிருந்தார்.  மேலும், முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் (26), ஜியோ பிளாட்பாா்ம் நிறுவனத்தின் (ஜேபிஎல்) இயக்குநராக கடந்த மே 2020-இல் நியமனம் செய்யப்பட்டாா். அண்மையில் இவர், ரிலையன்ஸ் ரீடெயில் வென்சா் நிறுவனத்தின் (ஆா்ஆா்விஎல்) இயக்குநராக நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.