கொசுப்புழு ஒழிப்பு பணியில் ட்ரோன்கள் இயக்க திருநங்கைகளுக்கு வாய்ப்பு

Updated in 2022-Jun-29 12:16 PM

திருநங்கைகளுக்கு பணி... கொசுப் புழு ஒழிப்பு பணியில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை இயக்க திருநங்கைகளை சென்னை மாநகராட்சி பணிக்கு அமர்த்த உள்ளது.

சென்னை மாநகராட்சியில் 170 கிமீ பரப்பளவு கொண்ட 5 பெரிய நீர் வழித்தடங்கள், 77.90 கிமீ பரப்பளவு கொண்ட 31 சிறிய கால்வாய்கள் என்று மொத்தம் 248 கி.மீட்டருக்கு நீர் வழித்தடங்கள் உள்ளது.

இவற்றில் கொழு புழுக்களை ஒழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி கடந்த ஆண்டு 3 முறையும், இந்தாண்டு 2 முறையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை நல்ல பலனை அளித்த நிலையில் சென்னை முழுவதும் 5 ட்ரோன்களை பயன்படுத்தி கொசு புழு ஒழிப்பு பணியை மேற்கொள்ள சென்னை திட்டமிடுள்ளது.

இப்பணிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனம் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் ட்ரோன்களை இதற்கான உரிமம் பெற்ற திருநங்கைகளைக் கொண்டு இயக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி 7 ட்ரோன்களை இயக்க 7 திருநங்கைகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனம் கழகத்தின் மூலம் பயிற்சி பெற்று உரிய உரிமம் பெற்றுள்ள திருநங்கைகள் இந்த ட்ரோன்களை இயக்க உள்ளனர். இவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்கப்படவுள்ளது.