கோவையில் நிரம்பிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

Updated in 2022-Jul-16 01:24 AM

நிரம்பும் அணைகள்... தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நிரம்பிய அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வால்பாறையில், தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. இதனால், பி.ஏ.பி., அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

சோலையாறு அணையின், 160 அடியும், கடந்த 10ம் தேதி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது. உபரி நீர் முழுவதும் கேரள சோலையாறு, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக கடலில் கலக்கிறது.

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கடந்த மூன்று நாட்களாக மதகுகள் வழியாக, 4,070 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, சோலையாறு அணையில், 162.62 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 9,108 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு, 9,649 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

பி.ஏ.பி., விவசாயிகள் கூறுகையில், 'வால்பாறையில் ஆண்டு தோறும் பருவமழை பெய்யும் போது, பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்புகின்றன. மழை தீவிரமடையும் போது, உபரிநீர் வீணாகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க, பி.ஏ.பி., திட்டத்தில் நிலுவையில் உள்ள ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்ட வேண்டும். அப்போது தான், பாசன திட்டத்தில், கூடுதலாக தண்ணீர் பெறலாம். பாசனத்துக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும்' என்றனர்.