மருத்துவர்கள் பற்றாக்குறை... சிறுவர்களுக்கான புற்றுநோய் பிரிவை மூட நடவடிக்கை

Updated in 2022-Oct-03 03:45 AM

புற்று நோய் பிரிவை மூட நடவடிக்கை... மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக சிறுவர்களுக்கான ஒரேயொரு புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் மூடப்பட்டு ஒன்றரை வருடம் கழிந்துள்ள நிலையில் அதனை திறப்பதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அங்கு சிகிச்சை பெற்றிருந்த சிறுவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர் புற்றுநோய் பிரிவில் 10 சிறுவர்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் காணப்படுகின்றன. இரண்டு விசேட வைத்திய நிபுணர்கள், அனுபவம் பெற்ற பணிக்குழாமினர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் பிரிவில் கடமையாற்றியிருந்தனர்.

குறித்த சிறுவர் பிரிவில் எல்ல, வெல்லவாய, பதுளை, மொனராகலை, அம்பாறை மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குறித்த சிறுவர் பிரிவு மூடப்பட்டதோடு, அதன்போது அங்கு 250க்கும் அதிகமான சிறுவர்கள் சிகிச்சைகளுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

சிறுவர் புற்றுநோய் பிரிவு மூடப்பட்டமையை அடுத்து குறித்த சிறுவர்கள் சிகிச்சைகளுக்காக மஹரகம வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். இந்த விடயம் தொடர்பில் கராப்பிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.டீ.யு.எம்.ரங்கவிடம் தெரிவிக்கையில், இலங்கையில் குறைந்தளவான புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான வைத்தியர்கள் மஹரகம வைத்தியசாலையில் சேவையாற்றுகின்ற நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் பிரிவில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.