மைல் கல்லுக்கு படையல்... ஆயுத பூஜை கொண்டாடிய விநோத சம்பவம்

Updated in 2022-Oct-04 07:36 AM

தமிழ் சினிமா ஒன்றில் விவேக் நடித்த நகைச்சுவை  காட்சி போல் மைல் கல்லுக்கு படையலிட்டு வாழைமரம் கட்டி, ஆயுத பூஜை கொண்டாடி உள்ளனர். இதுதான் தற்போது செம வைரலாகி வருகிறது.

வழக்கமாக ஆயுத பூஜை அன்று டிவி, ஃபிரிட்ஜ், வாகனங்கள், உள்ளிட்ட நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து ஆயுத பூஜை செய்வது வழக்கம். அதேபோல தொழிற்சாலைகளில் உள்ளவர்கள், மெசின்கள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை செய்வார்கள்.

ஆனால் கோயமுத்தூரில் முக்காலி, சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லிற்கு மாலை அணிவித்து, வாழைமரம் கட்டி, வாழை இலையில் படையலிட்டு பூஜை செய்துள்ள புகைப்படங்கள் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மைல் கல்லுக்கு மாலையிட்டு, பூ வைத்து, பொட்டிட்டு நெடுஞ்சாலைத் துறையினர் பூஜை செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அப்பகுதி மக்களோ அல்லது அங்குள்ள வம்பு பிடித்த இளைஞர்களோ தான் இதை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மறைந்த நடிகர் விவேக் ஒரு படத்தில் மைல் கல்லை குல தெய்வமாக வழிபடுவதை காட்சிப்படுத்தி ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்திருப்பார். அதுபோல்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோவையில் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை செய்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.