நாங்கள் இந்தியாவின் மகள்கள்... பிரியங்கா சோப்ரா பெருமிதம்

Updated in 2022-Oct-05 04:51 AM

நாங்கள் இந்தியாவின் மகள்கள்... பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தானும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் ஒரு வகையில் இந்தியாவின் மகள்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் தன்னுடைய இருப்பை பதிவு செய்திருக்கும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த வாரம் அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை, ஜனநாயக தேசியக் குழு மகளிர் தலைமை மன்றம் விடுத்த அழைப்பின் பேரில் நேர்காணல் செய்தார். இதில் பல நாடுகளில் இருந்து மிக முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரியங்கா, “ஒரு வகையில் நாங்கள் இருவரும் இந்தியாவின் மகள்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார். “நீங்கள் இந்திய தாய்க்கும், ஜமைக்கா தந்தைக்கும் பிறந்த அமெரிக்காவில் பிறந்த பெருமைக்குரிய மகள். நான் இரண்டு மருத்துவர்களை பெற்றோராகக் கொண்ட இந்தியர். 

20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு, இந்த ஆண்டுதான் ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளம் எனக்கு கிடைத்தது என்றார்.

தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், “நான் துணை ஜனாதிபதியாக உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறேன். 100 உலகத் தலைவர்களுடன் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ நேரடியாகப் பேசியுள்ளேன். நாங்கள் நீண்ட காலமாக எடுத்துக் கொண்ட விஷயங்கள் இப்போது விவாதத்திற்கும், கேள்விகளுக்கும் உள்ளாகி இருக்கின்றன. 
அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டதாக நினைத்தோம். ஒரு பெண்ணின் உரிமை, அரசியலமைப்பு உரிமை, தனது சொந்த உடலைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை தீர்ந்தது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது அது இல்லை.” என்று பேசினார்.

இதை ஆமோதித்த ப்ரியங்கா சோப்ரா, “ நிச்சயமாக. நீங்கள் சொல்வது சரிதான். இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.” என்றார்.