தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றுவோம்... வடலூரில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கும் பணி தொடங்கும்  

Updated in 2022-Oct-06 02:04 AM

தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு இது என்கிறார்கள். ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக. எனது பேச்சின் முன் பகுதி, பின் பகுதியை வெட்டி, ஒட்டி, திரித்து அவதூறு கிளப்பவும் வாய்ப்புள்ளது.

ஆன்மிகத்தை, அரசியல், சுயநலம், உயர்வு, தாழ்வு கற்பிக்க மட்டுமே பயன்படுத்துவதற்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து செயல்படுபவர்கள் இதனை நன்கு உணர்வார்கள்.

கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு அதிகம் செல்பவர் தான் அமைச்சர் சேகர்பாபு. அறப்பணிகள் எல்லாம் முறையாக நடக்கிறதா என்பதை பார்ப்பதற்காக தான் சேகர்பாபு அதிக நேரம் செலவிடுகிறார். ஒரு நளைக்கு மூன்று ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் சென்றுவருவார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் பேசினார்.