ஜுலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு; பொது போக்குவரத்து 15ம் தேதி வரை நிறுத்தம்

Updated in 2020-Jun-29 09:34 AM

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊடரங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உட்பட 4 மாவட்டங்கள், மாவட்டங்களுக்குள் இடையிலான இயக்கப்பட்டு வந்த பொது போக்குவரத்து ஜுலை 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு முறையும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.

இம்மாதம் துவக்கத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதற்கிடையில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததால் இம்மாதம், 15ம் தேதி, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நோய் பரவல் அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் தளர்வுகளை நீக்கி, முழு ஊரடங்கை அறிவிக்கும்படி, மருத்துவ குழு பரிந்துரை செய்தது. அதையேற்று, 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கை, முதல்வர் அறிவித்தார். 

இதையடுத்து மதுரை, தேனி மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்த காரணத்தால் இரு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் இன்னமும் குறையவில்லை. சென்னையில், 19ம் தேதியிலிருந்து, முழு ஊரடங்கு அறிவித்தும், நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

'நோய் தொற்று உச்சத்தை தொட்டு, பின் குறைய துவங்கும். அதற்கு முன்பாக, ஊரடங்கை முழுமையாக தளர்த்தினால், நோய் பரவல் வேகம் இன்னும் அதிகரிக்கும்' என, சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் மூன்று மாதங்களாக, ஊரடங்கு காரணமாக, எங்கும் செல்ல முடியாமல் தவித்து வரும் மக்கள், எப்போது ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் இன்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இன்று இரவு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.