கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்… அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 5 செ.மீட்டர் மழையும்,செந்துறை, கும்பகோணம், நன்னிலத்தில் தலா 3 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் கூறினார். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்குமென அவர் குறிப்பிட்டார்.
குமரிக்கடல் பரப்பில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் மழை பொழிவு இருக்குமென புவியரசன் குறிப்பிட்டார். ஆனால் அடுத்த இரு நாட்களுக்கு பின்னர் மழை மெல்ல குறையும் என்றும் 5 நாட்களுக்கு பின்னரே மழை பொழிவு அதிகரிக்கும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.