தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்திடம் வழங்க நாங்கள் தயாரில்லை… அமைச்சர் லக்ஸ்மன் கரியெல்ல சொல்கிறார்

November 6, 2019 20 0 0

நாங்கள் தயாரில்லை… தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது எனவும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழர் தரப்பு முயற்சிக்கின்றது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அத்தோடு வடக்கு, கிழக்கிலுள்ள மக்களின் நிலங்களை இராணுவத்திடம் வழங்குவதற்கு தாம் தயாரில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு குறித்து ராஜபக்ஷ தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “வடக்கு, கிழக்கு மக்களின் பிரதான கோரிக்கை அவர்களின் நிலங்களை பெற்றுக்கொடுப்பதாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் எமது ஆட்சியில் முன்னெடுத்துள்ளோம்.

முக்கால்வாசி நிலங்களை நாம் மக்களிடம் ஒப்படைத்துவிட்டோம். எஞ்சியுள்ள மக்களின் காணிகள் பாதுகாப்பு வளையங்களில் இருப்பதாலேயே அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்காக மக்களின் நிலங்களை இராணுவத்திடம் கொடுக்க நாம் தயாரில்லை.

இராணுவ முகாம்களுக்கு உரிய நிலங்களை தவிர ஏனைய நிலங்களை நாம் கண்டிப்பாக விரைவில் விடுவிப்போம். இது எமது நீண்டகால தீர்மானம் என்பதே உண்மையாகும். தமிழ் மக்கள் இந்த நாட்டில் விசேட கவனம் செலுத்த வேண்டிய மக்களாக மாற கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தவறுகளே காரணமாகும். எமது ஆட்சியில் அதே தவறை நாம் செய்ய தயராக இல்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நாம் தமிழ் மக்களுக்கு நன்மைகளையே செய்துள்ளோம்.

அதேபோல் அரசியல் அமைப்பு தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கும் புதிய அரசியல் அமைப்பு தேவையுள்ளது.

அதனையே தமிழ் மக்களும் கேட்கின்றனர். ஆகவே புதிய அரசியல் அமைப்பில் அதியுச்ச அதிகாரங்களை பகிர்ந்து தமிழர் நிலங்களில் அவர்களின் நிருவாக அலகுகளின் கீழ் செயற்பட இடமளிக்க வேண்டும்.

இது நாட்டினை துண்டாடும் செயற்பாடு அல்ல. அதேபோல் வேலைவாய்ப்புக்கள், அபிவிருத்திகள், தரமான கல்வி சுகாதாரம் என்பனவற்றை தமிழ் மக்கள் கேட்பது ஜனநாயக விரோதமாக கருதும் நபர்களே இன்று இனவாத கருத்துக்களையும் பிரிவினைவாத கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர்.

ஐக்கியம் என்ற வார்த்தையைக்கூட விரும்பாத ராஜபக்ஷவினர் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் அவமதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.

Tags: ஐக்கியம், கருத்துக்கள்., தமிழ் மக்கள், பிரிவினைவாதம் Categories: sri lanka
share TWEET SHARE
Related Posts