அமமுக வழங்கிய போலி மளிகை டோக்கன்; அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்

Updated in 2021-Apr-07 07:13 AM

அதிர்ச்சியடைந்த மளிகைக்கடைக்காரர்... கும்பகோணத்தில் மளிகை கடை பெயர் அச்சிட்டு 2000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ள அ.ம.மு.க. தரப்பில் வழங்கிய டோக்கன் ஏமாற்று வேலை என தெரிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் பாலமுருகன் தரப்பில் 2000 ரூபாய் மதிப்புள்ள டோக்கன்கள் கடந்த 5ம் தேதி காலை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் உள்ள பிரியம் மளிகைக் கடையில் டோக்கனை கொடுத்து மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொள்ள வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்த டோக்கனை பெற்றவர்கள் அந்தக் கடைக்கு சென்று மளிகைப் பொருட்கள் கேட்டுள்ளனர். டோக்கனுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கடைக்காரர் கூற வாக்காளர்கள் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து மளிகை கடை உரிமையாளர் ஷேக் முகமது தேர்தல் நடத்தும் அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து மளிகைக்கடைக்காரர் ஷேக்முகமது கூறியதாவது: கடந்த 5ம் தேதி இரவில் இருந்து என் கடை முகவரி அச்சிட்ட டோக்கனை பலரும் கொண்டு வந்து இலவசமாக மளிகை பொருட்களை கேட்டனர். 5ம் தேதி இரவு மட்டுமே 200 பேர் வரை வந்தனர். தேர்தல் விடுமுறைக்கு பின் கடையை திறந்ததும் பலர் டோக்கனோடு வந்தனர்.

என் கடையின் பெயரை பயன்படுத்தி இந்த டோக்கன்களை யார் கொடுத்தது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட்டபோது 20 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து வெற்றி பெற்றார். அதன்பின் அந்த 20 ரூபாயோடு அந்த தொகுதி மக்கள் திருப்திபட வேண்டியதாயிற்று.

'கட்சித் தலைவர் எவ்வழி; தொண்டர் அவ்வழி என்பதை நிரூபிப்பது போல் அ.ம.மு.க. வேட்பாளரும் வாக்காளர்களுக்கு மளிகை பொருள் டோக்கன் கொடுத்து ஏமாற்றி உள்ளார்' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.