கேரளா மாநிலம் இடுக்கியில் குலை தள்ளியுள்ள இந்தோனேசிய வாழைமரம்

Updated in 2021-Apr-10 01:57 AM

விவசாயிகள் ஆச்சரியம்... இடுக்கியில் குலை தள்ளியுள்ள இந்தோனேசிய வாழையை விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே மஞ்சப்பட்டி என்ற இடத்தில் புனித மேரி பள்ளி நிர்வாகியாக சிஜோ என்பவர் இருந்து வருகிறார். இவரிடத்தில், இந்தோனேசிய நாட்டின் வாழைப்பழ வகைகளில் ”பப்பாலூ” என்பது பிரசித்தி பெற்றது என்றும் நீளம் குறைந்த இந்த வாழைப்பழம் கேரளாவின் நேந்திரம் வாழைப்பழம் போன்றே சுவையானது என்றும் சிப்ஸ் தயாரிக்க உதவுமென்றும் இந்தோனேஷியாவில் வசிக்கும் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து , சோதனை முறையில் இந்தோனேஷியாவில் இருந்து பப்பாலூ வாழைக்கன்றை வாங்கி சிஜோ நட்டுள்ளார். தற்போது, சிஜோ நட்டுள்ள பப்பாலூ வாழை மரம் குலை தள்ளியுள்ளது. இந்த வாழைக்காய்கள் நீளம் குறைவாகவும் சற்று பருமானகவும் காணப்படுகின்றன. இந்தோனேசிய வாழையை ஏராளமான விவசாயிகளும் கண்டு செல்கின்றனர்.

இந்த பழத்தின் சுவை அதிகமாக இருப்பதால் மேலும் 3 ஏக்கர் பரப்பளவில் “பப்பாலூ” ரக வாழையை பயிரிடப்போவதாக சிஜோ தெரிவித்துள்ளார். பொதுவாக சிப்ஸ் தயாரிக்க நேந்திரம் வாழைப்பழங்கள் பயன்படுகின்றன.

ஆனால், நேந்திரம் பழங்கள் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுவதால், சிப்ஸ் உற்பத்திக்கு மாற்று வாழை ரகங்களை கண்டுபிடிக்க வேண்டுமென்ற கோரிக்கை கேரளாவில் பரவலாக உள்ளது.