விலை குறைவாக கேட்பதால் வேதனையில் சிக்கி தவிக்கும் பாகற்காய் விவசாயிகள்

Updated in 2021-Apr-12 03:00 AM

விவசாயிகள் வேதனை... கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கம்மாத்தி, கொரவயல், புத்தூர்வயல், முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுழி மற்றும் பாடந்துறை, புளியம் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் பாகற்காய் விவசாயம் செய்கின்றனர்.

குறிப்பாக விசு பண்டிகை காலத்தில் பாகற்காய்க்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் பாகற்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாகற்காய்களை கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

தற்போது அப்பகுதிகளில் பாகற்காய் கிலோ ரூ.50க்கு மேல் விற்பனை செய்யும் நிலையில், வியாபாரிகள் விவசாயிகளிடம் ரூ.25க்கும் குறைவாகவே விலை கொடுத்து வாங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் மேலும் கூறுகையில் - இடுபொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான விலை, வேலையாட்கள் கூலி, உள்ளிட்டவை அதிகமாகி உள்ள காலகட்டத்தில் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களுக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் தங்களிடம் உற்பத்தியாகும் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக  அரசு வேளாண் விற்பனை துறை மூலம் அதிகாரிகளை நியமித்துள்ளனர். விவசாயிகளுக்கு வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் அறிமுகப்படுத்தி கொள்முதல் செய்யவும், விவசாய பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டிய அதிகாரிகளே, விவசாயிகளை நேரடியாக சந்தைப்படுத்தும் முறைகளை மேற்கொள்ள வற்புறுத்துவதாகவும், இதனால் தங்களது விவசாய பணிகள் பாதிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.