தனுஷின் கர்ணன் படம் முதல் மூன்று நாள்களில் ரூ.23 கோடி வசூலிப்பு

Updated in 2021-Apr-13 12:47 PM

3 நாளில் 23 கோடி ரூபாய் வசூல்... தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 23 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது. கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது.

ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் கர்ணன் படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் முதல் மூன்று நாள்களில் தமிழ்நாட்டில் கிட்டதட்ட ரூ. 23 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் வெளியான நாளில் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த இரு நாள்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனினும் இந்தளவுக்கு வசூலித்திருப்பது கர்ணன் படத்தின் பெரிய வெற்றியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.