தொல்பொருள் துறையின் கீழ் உள்ள நினைவு சின்னங்களை மூட மத்திய அரசு 

Updated in 2021-Apr-15 10:01 AM

மத்திய அரசு உத்தரவு... தொல்பொருள் துறையின் கீழ் உள்ள நினைவு சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சுற்றுலாத் தலங்கள், புரதான சின்னங்கள், அருங்காட்சியகங்களை பார்வையிட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இன்று காலை 9 மணி நிலவரப்படி 2,00, 739 பேருக்கு பாதிப்பு பதிவானது. அத்துடன், நாடு முழுவதும் 1038 பேர் உயிரிழந்தனர். இதனிடையே நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தொல்பொருள் துறையின் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை வரும் மே 15ம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுபோலவே நாடு முழுவதும் இன்னும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பெரிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை என ஏற்கனவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.