கொரோனாவால் இறந்தவர் உடல் முழுவதும் எறும்புகள் இருந்ததால் அதிர்ச்சி

Updated in 2021-May-16 01:56 AM

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் முழுவதும் எறும்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர் சரியான முறையில் பாதுகாப்பாக, பேக் செய்யாமல் போர்வையால் சுற்றி கொடுப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை  32,903 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,637 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 4,891 நபர்கள் 
கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த மூன்று நாட்களில் மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோய் தொற்றால் உயிரிழக்கும் உடல்களை முறையாக பக்குவப்படுத்தி, பாதுகாப்பு இன்றி  உறவினர்களிடம் ஒப்படைப்பதால்,  நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூரில் இறந்த ஒருவரின் உடலை வெறும் போர்வையால் சுற்றி உறவினர்களும் ஒப்படைத்துள்ளனர். அங்கு மின் மயானத்திற்கு எடுத்துச் சென்று உடலை பார்த்த போது உடல் முழுவதும் எறும்புகளால் சூழப்பட்டு இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதேபோல் மின்மயானத்தில் உடலை எரியூட்டும் ஊழியர்களுக்கு எந்த பாதுகாப்பு கவச உடைகள் இன்றி அவர்கள் உடலை எரித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பு நிலையும் கேள்விக்குறியாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.