கொரோனோ கொத்தணியை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது; இராணுவ தளபதி தகவல்

Updated in 2021-May-16 02:01 AM

கொரோனா கொத்தணியை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அசமந்தப்போக்கால்தான் 'புத்தாண்டுக் கொத்தணி' உருவாகி நாடு அபாயத்தைச் சந்தித்துள்ளது. இந்தக் கொரோனா கொத்தணியை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என கொரோனாத் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுமீறிப் போய்விட்டது. பொதுமக்களின் அசமந்தப்போக்கால்தான் 'புத்தாண்டுக் கொத்தணி' உருவாகி நாடு அபாயத்தைச் சந்தித்துள்ளது.

இந்தக் கொரோனாக் கொத்தணியை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. இந்தநிலையில், பயணக் கட்டுப்பாட்டு விதிகளை மீறாத வகையில் மக்கள் செயற்பட வேண்டும். நிலைமை மோசமடைந்தால் கட்டுப்பாடுகளை நாம் மென்மேலும் இறுக்க வேண்டி வரும்.

இதேவேளை, நாட்டில் நேற்றும் 2 ஆயிரத்து 386 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்படி கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளை, கொரோனாத் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 22 ஆயிரத்து 310 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், 941 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.