நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரி மகனும் நடிகராக அறிமுகம்

Updated in 2021-Jun-24 02:55 AM

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் உறவினர் ஒருவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. தமிழில் விஜய் போன்று, தெலுங்கில் மகேஷ் பாபு என்று சொல்வார்கள். விஜய் நடித்து வெற்றிப் பெற்ற 'கில்லி', 'போக்கிரி' போன்ற திரைப்படங்கள் மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீமேக்குகள்தான்.

சிறுவர்கள், இளைஞர்கள் என மகேஷ் பாபுவுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவும் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக இருந்தவர். இப்போது, இவர்கள் குடும்பத்தில் இருந்து மூன்றாவதாக ஒருவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார். அவர் மகேஷ் பாபுவின் மருமகன் அசோக் கல்லா.

மகேஷ் பாபுவின் சகோதரி பத்மாவதியின் மகன்தான் இந்த அசோக் கல்லா. இவர் புதுமுகமாக நடித்துள்ள படத்தின் பெயர் `ஹீரோ'. இந்தப் படத்தின் போஸ்டரை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு அசோக்கை வாழ்த்தினார் மகேஷ் பாபு.

"அசோக் கல்லாவின் முதல் பட தலைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். படத்தில் அசோக்கின் லுக் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஹீரோ பயணம் இங்கே தொடங்குகிறது. படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் குழுவினருக்கு நல்வாழ்த்துக்கள்" என்று தனது வாழ்த்தில் பதிவிட்டு இருந்தார் மகேஷ் பாபு. ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியுள்ள இப்படத்தை மகேஷ் பாபுவின் சகோதரி பத்மாவதியே தயாரித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவே வாரிசு நடிகர்களுக்கு பெயர் போனது. இன்னும் சொல்லப்போனால் ஒரு நான்கு குடும்பம் மட்டுமே தெலுங்கு சினிமாவை ஆண்டு வருகிறது. இந்த வரிசையில் மகேஷ் பாபுவின் மருமகனும் வாரிசு நடிகராக நடித்துள்ளார். இதற்கிடையே, 'ஹீரோ' படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.